திமுக வின் ரிஷிவந்தியம் தொகுதி எம் எல் ஏ வசந்தம் கார்த்திகேயன் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே திமுகவின் ஜெ அன்பழகன் மற்றும் பலராமன் ஆகியோர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததால் வசந்தம் கார்த்திகேயனுக்கும் கொரோனா பரவியது திமுகவினருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இருவார சிகிச்சைக்கு பின்னர் அவர் இப்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ‘பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய கழகத்தோழர்கள், நிர்வாகிகள், மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! கழகத் தலைவரின் தொடர் ஊக்கத்தினாலும், அன்பினாலும், கழகத்தின் மூத்த தலைவர்கள், முன்னோடிகளின் ஆசியாலும்... நானும் எனது குடும்பத்தினரும் நலம்பெற வேண்டிய உங்களின் கூட்டுப் பிரார்த்தனையாலும் பூரண நலம் பெற்று மருத்துவமனை யிலிருந்து வீடு திரும்பிவிட்டோம். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 15 நாட்களாக என் மீது தாங்கள் காட்டிய எல்லையற்ற பேரன்பிற்கு... நன்றி என்ற சொல்லால் நன்றி சொல்லிவிட முடியாது என்பதை நானறிவேன். சில நாட்கள் ஓய்விற்கு பின் மீண்டும் உங்களை இருவண்ணக்கொடி பறக்கும் கழகக்கொடி மரத்தின் கீழ் சந்தித்து அளவளாவ ஓடோடி வருவேன்... என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.