தமிழக பாஜக தலைவர் தமிழிசை அரசியல் நிலவரம் குறித்து ஏதாவது கருத்து கூறினால் அது அப்படியே நடந்து விடுகிறது என பேசிக்கொள்கிறார்கள். குறிப்பாக அதிமுக விவகாரம் குறித்து தமிழிசை பேட்டியளித்தால் போதும், தமிழிசையே சொல்லிட்டாங்க அப்புறம் என்ன அது தான் நடக்க போகுது என கூறும் அளவுக்கு சரியாக கணித்து கூறுகிறார்.
இது அவருடைய துல்லியமான கணிப்பா அல்லது மத்தியில் அவரது கட்சி ஆட்சியில் இருக்கிறது, அந்த செல்வாக்கினால் சொல்கிறாரா என்பது நமக்கு தெரியாது. இந்நிலையில் இந்த வரிசையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் இணைந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இன்று பேட்டியளித்த எச்.ராஜா, சசிகலாவுக்கு துணையாக டி.டிவி.தினகரனும் சிறைக்கு செல்வார் என ஆரூடம் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லி போலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அவர் விசாரணைக்கு நாளைக்கே ஆஜராக வேண்டும் எனவும் கூறியுள்ளது டெல்லி போலீஸ்.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக இருக்கும் தினகரன் மீது வலுவான குற்றச்சாட்டுகளும், அதற்கான வலுவான ஆதராங்களும் இருப்பதால் ஒருவேளை அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வருகிறது. அப்படியென்றால் எச்.ராஜா கூறியது நடந்துவிடுமோ?.