இலங்கை கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த திரு.மூக்கையா (வயது 54), திரு.முத்துமுனியாண்டி (வயது 57), திரு.மலைச்சாமி (வயது 59) மற்றும் திரு.இராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று (01.08.2024) அதிகாலை இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்குவந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில், மீன்பிடி விசைப்படகு சேதமடைந்து நீரில் மூழ்கியதில் திரு.மலைச்சாமி (வயது 59) என்பவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், அந்த விசைப்படகில் சென்ற இரண்டு மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகிறது. மேலும், மற்றொரு மீனவர் தேடப்பட்டு வருகிறார். தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும், நேரிலும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் உரிய தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும் இதுபோன்ற விலைமதிப்பில்லா உயிரிழப்புகளும் நேர்கின்றது. இச்சம்பவத்தை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு தக்க முறையில் எடுத்துச் செல்லும்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த திரு. மலைச்சாமி அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.