திருச்சியில் தனியார் பள்ளியில் படித்த 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நான்கு பேரை காவல்துறை கைது செய்திருப்பதாகவும், இன்னும் சிலரை தேடி வருவதாகவும், திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினம் பேட்டி அளித்துள்ளார்.
அவர் மேலும் கூறிய போது, திருச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பெண் குழந்தைக்கு எதிராக பாலியல் தொல்லை நடந்த குற்றச்சாட்டு வந்தவுடன், காவல்துறை துரிதமாக செயல்பட்டு, குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்களில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மீதமுள்ள ஒருவரை விரைவில் கைது செய்வோம். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
இன்னும் இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் இருந்தால், அவர்களும் கைது செய்யப்படுவார்கள். மேலும், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் காவல்துறை திரட்டி வருகிறது. பெண் ஆய்வாளர் தலைமையில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி உள்பட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வழிவகை செய்யப்படும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் திருச்சி எஸ்.பி. செல்வம் நாகரத்தினம் பேட்டி அளித்துள்ளார்.