சென்னையை நெருங்கிக் கொண்டிருக்கிறது வர்தா புயல். இந்த புயல் சென்னை பழவேற்காடு பகுதி அருகே அதிதீவிர புயலாக கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதுவரை சென்னைக்கு அருகில் உருவான புயல்கள் எல்லாம் வலுவிழந்து விடும் அல்லது ஆந்திரா பக்கம் சென்று விடும். எனவே சென்னைக்கு பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
ஆனால், தற்போது உருவாகியிருக்கும் இந்த வர்தா புயல் நேரடியாக சென்னையை தாக்கியுள்ளது. இதற்கு முன் 1994ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், சென்னை கடலூர் இடையே வங்கக் கடலில் உருவான புயல் மணிக்கு 115 கி.மீ வேகத்தில் கடுமையான காற்றுடன் சென்னையில் வீசியது.
அந்த புயல் கரையைக் கடந்த போது 24 மணி நேரம் மழை பெய்தது. சென்னையில் மட்டும் 13 செ.மீ மழை பதிவானது. சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. 26 பேர் பலியாகினர்.
அதன்பின், அதாவது 22 ஆண்டுகளுக்கு பின் தற்போது வர்தா புயல் இன்று சென்னை தாக்கியுள்ளது. இன்று பிற்பகல் 100-120 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் கரையை கடக்கும். அதுவரை மழை பெய்து கொண்டே இருக்கும். இன்று இரவு வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இன்று பிற்பகல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.