மரணத்திலும் இணைபிரியாத தம்பதிகள்

Webdunia
வியாழன், 11 ஜனவரி 2018 (15:37 IST)
சென்னையைச் சேர்ந்த தம்பதி, சாவிலும் இணைபிரியாமல் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கிண்டி சிறுவர் பூங்காவில் பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி உமா மகேஷ்வரி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றுவலியால் துடித்த பிரகாஷ், ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பிரகாஷின் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது. நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் பிரகாஷ் வேதனையைடைவதை பார்க்க முடியாமல் உமாமகேஸ்வரி தவித்தார். கணவன் பிரகாஷ் தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத உமா, தற்கொலை செய்ய முடிவு செய்து, கோயிலுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டைவிட்டுச் சென்றார். இரவு வரை அவர் வீடு திரும்பவில்லை. 
 
இதற்கிடையில் உமாமகேஸ்வரி தனது மகன் கேசவனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். அதில் 'அப்பாவை நன்றாகக் கவனித்துக்கொள்.  நான் என் முடிவைத் தேடிக்கொள்கிறேன்' என குறிப்பிட்டிருந்தது. இதைப் பார்த்த கேசவன் மற்றும் பிரகாஷ் பதற்றமடைந்தனர். பின் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். காவல் நிலையத்திற்கு சென்று வந்த சிறிது நேரத்தில், மனைவி காணாமல் போனதை நினைத்து பிரகாஷ் உயிரிழந்தார். இதனையடுத்து போலீஸார் மாயமான உமாமகேஸ்வரியைத் தேடினர். இந்நிலையில் பெசன்ட் நகர் கடற்கரை ஓரத்தில் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒதுங்கியது. அந்தப் பெண்குறித்து விசாரித்தபோது, அது உமாமகேஸ்வரி என்று தெரியவந்தது. இதையடுத்து, உமாமகேஸ்வரியின் உடல், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அப்பாவையும் அம்மாவையும் ஒரே சமயத்தில் இழந்த சோகத்தில் கேசவன் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரையவைத்தது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்