போதையில் தாறுமாறாக காரோட்டிய தொழிலதிபர் மகனை அடித்துக் கொன்ற பொதுமக்கள்

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (12:53 IST)
சேலம் - திருச்சி சாலையில் போதையில் காரை ஓட்டியதால் 10 மேற்பட்டவர்கள் காயமடைந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை ஓட்டிய தொழிலதிபர் மகனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.


 

சனிக்கிழமை இரவு சீலநாயக்கன்பட்டியில் இருந்து திருச்சி சாலை வழியாக சேலம் பழைய பேருந்து நிலையம் நோக்கி வேகமாக வந்துக் கொண்டிருந்த கார் ஒன்று சிக்னலில் நிற்காமலும், தாறுமாறாக ஓடி, சாலையோரம் நின்றிருந்த மோட்டார் சைக்கிள்களை இடித்ததோடு, பொதுமக்களை மீதும் மோதியது,

இதில், 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் அடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த காரை விரட்டிப் பிடித்து மடக்கினர். அந்த காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்தார். அவர் அளவுக்கு அதிகமாக குடி போதையில் இருந்தது தெரிந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை ஓட்டி வந்தவருக்கு தர்ம அடி கொடுத்தனர். அதில், அவர் படுகாயம் அடைந்தார். மேலும், கார் கண்ணாடி மற்றும் பக்கவாட்டு பகுதியை பொதுமக்கள் கற்களாலும், கட்டையாலும் தாக்கி அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பிறகு நடத்திய விசாரணயில், காரை ஓட்டு வந்தவர் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் மைக்கேல்ராஜ் என்பவரின் மகன் ஆசிஸ் இக்னோசியஸ் (25) என்பது தெரியவந்தது.

அவர், குடும்பத்தில் சண்டை போட்டுக்கொண்டு ஊர் ஊராக சுற்றி வந்துள்ளார். மேலும், அவருக்கு போதை பழக்கம் இருந்து வந்ததும் தெரிந்தது. மேலும், அந்த காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, சிகிச்சை பெற்று வந்த ஆசிஸ் இக்னோசியஸ் நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பொதுமக்கள் அடித்ததில் அவர் உயிரிழந்தாரா? அல்லது அளவுக்கதிகமாக போதையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்தாரா? என்பது குறித்து செவ்வாய்பேட்டை காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அடுத்த கட்டுரையில்