அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை கூடுமா?

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (20:14 IST)
சென்னையில் நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பெங்களூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக, தற்போது எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. அந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் தலைமையில் நாளை சென்னை வானகரத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. முக்கியமாக, அந்த கூட்டத்தில் சசிகலாவை நீக்குவது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட இருந்தது.  
 
இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தினகரன் அணியை சேர்ந்த கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி பெங்களூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 
 
அந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்த நீதிபதிகள், நாளைக் கூடவிருந்த பொதுக்குழுவிற்கு இடைக்காலத்தடை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், அக்டோபர் 13ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளனர். 


 

 
இதன் மூலம், சென்னையில் நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்குழு கூடுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஆனால், திட்டமிட்ட படி நாளை பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிமுக எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார். பொதுக்குழு வழக்கை விசாரிக்க பெங்களூர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும், அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி ஆகியவை சார்பில்தான் பொதுக்குழு நடைபெறுகிறது. அதிமுக என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லை. எனவே இந்த கூட்டத்திற்கு பெங்களூர் நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
அதேபோல், அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுவதால், அதற்கு பெங்களூர் நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என வழக்கறிஞர் விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே, நாளை பொதுக்கூட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது. 
 
இந்நிலையில், இதே விவகாரம் தொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல், சென்னை நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இரண்டு நீதிபதிகள் கொண்ட தலைமையில் தற்போது வெளியான தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்க எந்த தடையும் இல்லை என தீர்ப்பு வெளியாகியுள்ளது. எனவே, நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

அதே சமயம், உடனடியாக தினகரன் தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து நாளை காலை 10 மணிக்குள், இந்த கூட்டத்திற்கு தடை பெற்றுவிட்டால், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாது எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்