அப்போலோ வாசலில் காத்திருக்கும் தொண்டர்கள் : கலக்கம் தீருமா?

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (12:54 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையின் உண்மை நிலையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அப்போலோ வாசலில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.     
 
நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
ஒருபக்கம் அவரது உடல்நிலை பற்றிய வதந்திகளும் பரவி வருகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், அவரை சந்திக்க வேண்டும் என்றும், அவரது உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அதிமுக தொண்டர்கள் பலர் அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் காத்துக் கிடக்கின்றனர்.


 

 
அதிமுக பெண் தொண்டர்கள் பலர் கண்ணீர் தோய்ந்த முகங்களுடன் காத்துக்கிடப்பதைக் காண முடிகிறது. மேலும், முதல்வர் விரைவில் நலமடைய வேண்டி பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். 
 
அப்போலோ மருத்துவமனை நுழைவு வாயிலின் முன் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். அதை தாண்டி சென்று, முதல்வரின் உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிரம் அவர்களிடம் காணப்படுகிறது. சில அதிமுக விசுவாசிகள், காவல் அதிகாரிளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் அங்கு அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகிவிட்டது.
 
முதல்வரின் உடல்நிலை குறித்து கிளம்பும் வதந்திகள், ஒருபக்கம் அவர்களை பீதியடைய வைக்கிறது. அம்மா நலமாக இருக்கிறார்.. விரைவில் குணமடைந்து அடைவார் என்று நிர்வாகிகளும், அமைச்சர்களும் கூறிவரும் வார்த்தை அவர்களுக்கு ஆறுதலை அளித்தாலும், முதல்வரின் முகத்தை பார்க்க வேண்டும் அல்லது அவர் பேச்சையாவது கேட்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆவலாக இருக்கிறது.


 

 
குறைந்தபட்சம் வாட்ஸ் அப் மூலமாகவாவது முதல்வர் பேச மாட்டாரா என்று காத்துக் கிடக்கிறோம் என்று அதிமுக தொண்டர்கள் கூறுவதை கேட்க முடிகிறது.
 
அவ்வப்போது அமைச்சர்கள் மட்டும் மருத்துவமனைக்குள் சென்று வருகிறார்கள். எனவே, அமைச்சர்களுக்கு மட்டும்தான் அம்மாவா?.. அவர் எங்களுக்கும்தான் அம்மா.. என்று கொதிக்கின்றனர் சில விசுவாசிகள்..
 
அப்போலோ நிர்வாகம் வெளியிடும் அறிக்கைகள் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கலாம். ஆனால் முதல்வரின் முகத்தை பார்க்க வேண்டும் அல்லது அவரை குரலை கேட்க வேண்டும் என்பதுதான் அவர்களின் தற்போதைய வேண்டுதலாக இருக்கிறது.
 
காத்துக் கிடக்கும் தொண்டர்களின் கலக்கம் தீருமா?...
அடுத்த கட்டுரையில்