சிலிண்டர் விலை உயர்வு: கனிமொழி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!

திங்கள், 21 டிசம்பர் 2020 (07:46 IST)
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கனிமொழி தலைமையில் இன்று திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளது
 
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே பொருளாதாரத் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் 15 நாட்களில் ரூபாய் 100க்கும் மேல் கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து டிசம்பர் 21ஆம் தேதி அதாவது இன்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் தமிழகம் முழுவதும் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார் 
 
அந்த வகையில் இன்று கனிமொழி தலைமையில் உள்ள மகளிரணியினர் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். தூத்துக்குடியில் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
 
முன்னதாக முக ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அந்தந்த மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அந்தந்த மாவட்டங்களில் கலந்து கொண்டு அனைத்து தரப்பு மகளிரையும் ஒன்று திரட்டி இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் ஆர்ப்பாட்டமாக நடத்த வேண்டும் என்றும், தமிழக தாய்மார்கள் எழுப்பும் முழக்கம் தலைநகர் டெல்லி வரை கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்