சென்னை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீவிபத்து: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (08:55 IST)
சென்னை மண்ணடியிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னை மண்ணடியில் ஐந்து  மாடிகள் கொண்ட பி.எஸ்.என்.எல் கட்டிடத்தின் முதல் தளத்தில் தீ பிடித்ததாகவும் பின்னர் இந்த தீ மளமளவென அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியதாகவும் தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலறிந்து 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுக்க புகை மூட்டமாக காணப்படுவதால் அந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
தீ விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளதால் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் கட்டிடத்தில் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்று தீயணணப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதேநேரத்தில் ஏராளமான முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட முக்கிய எலக்ட்ரானிக் இயந்திரங்கள் தீயில் கருகியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.  இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணம் என கூறப்பட்டாலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்