விஷவாயு தாக்கி 4 பேர் பலி; ஆட்டு கிடாயை மீட்க சென்றபோது பரிதாபம்

Webdunia
திங்கள், 9 மே 2016 (11:33 IST)
புதுக்கோட்டை அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆட்டு கிடாயை மீட்க சென்றபோது விஷவாயு தாக்கி 4 பேர் பலியாகி உள்ளனர்.
 

 
புதுக்கோட்டையை அடுத்த கறம்பக்குடி அருகே உள்ள துவார் கிராமத்தைச் சேர்ந்த கட்டையன் மகன் அய்யாவு என்பவரது ஆட்டுக்கிடா ஒன்று நேற்று ஞாயிறுக்கிழமை [08-05-16] அன்று காலையில் கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
 
இந்த பழங்காலத்துக் கிணறானது நீண்ட காலமாகப் பயன்படுத்தாமல் இருந்திருக்கிறது. அந்தக் கிணற்றில் ஆட்டுக்கிடா தவறி விழுந்ததை கிணற்றின் சொந்தக்காரரான சவுந்தரராசனின் மனைவி பார்த்திருக்கிறார். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்களுக்கு அதைச் சொல்லியிருக்கிறார்.
 
அதனால் அதை மீட்க எண்ணிய ஆட்டு கடாயை உரிமையாளரான அய்யாவு கயிற்றைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கியிருக்கிறார். கீழே இறங்கியவர் அரை மணி நேரம் கழித்தும் எந்தச் சத்தமும் வராததால் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் ரெங்கசாமியும் இறங்கியிருக்கிறார்.
 
அவரும் இறங்கியதும், எந்தச் சத்தமும் வராமல் இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்தக் கிணற்றின் உரிமையாளர் பெரமய்யாவும் கிணற்றில் இறங்கியிருக்கிறார். அவரும் வராததால் அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தரராசன் என்பவர் இறங்கியபோது தண்ணீரில் குதிப்பது போல் சத்தம் வந்திருக்கிறது.
 
ஆனால் அவரிடமிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை என்பதால் அதன் பிறகுதான் அங்கிருந்தவர்கள் சந்தேகப்பட்டு கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
 
அதன் பிறகு கறம்பக்குடி தீயணைப்பு அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து கயிற்றைக் கட்டிக் கொண்டு முதலில் தீயணைப்பு வீரர் ஒருவர் இறங்கி சுமார் 20-அடி ஆழம்வரை இறங்கிய போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் அந்தக் கிணற்றில் விஷவாயு சூழ்ந்திருந்தது தெரிய வந்திருக்கிறது.
 
அதன்பிறகு ஆலங்குடி தீயணைப்பு நிலையம், புதுக்கோட்டை தீயணைப்பு நிலையம் ஆகியவற்றுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் வந்தனர். புதுக்கோட்டை மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஹக்கீம்பாட்சா வழிகாட்டுதலுடன் சுவாசக் கருவிகளும் வரவழைக்கப்பட்டது.
 
அதனைத் தொடர்ந்து அந்தக் கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்றி விட்டு செயற்கை வாயு சுவாசக் கருவியைப் பொருத்திக் கொண்டு தீயணைப்பு வீரர் கார்த்திகேயன் இறங்கிப் பார்த்தபோது அந்த நால்வரும் ஆட்டுக்கிடாவும் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
 
தீயணைப்பு வீரர்கள் அந்த நால்வரின் உடல்களையும் வெளியில் கொண்டு வந்தனர். பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவம் குறித்து கறம்பக்குடி காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்