விலைவாசி உயர்வுக்கு அதிமுக அரசே காரணம் - கனிமொழி

Ilavarasan
திங்கள், 7 ஏப்ரல் 2014 (10:48 IST)
அனைத்து விலைவாசியையும் அதிமுக அரசு உயர்த்திவிட்டு திமுக மீது பழி போடுகிறது என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
 
வட சென்னை திமுக வேட்பாளர் ரா.கிரிராஜனை ஆதரித்து ராயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசியது:
 
அதிமுக ஆட்சி சாதனைகள் நிறைந்த ஆட்சி என ஜெயலலிதா கூறி வருகிறார். ஆனால், தமிழகத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் சுவரைப் போல நிற்பது சட்டம்-ஒழுங்கு பிரச்னை, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு என பிரச்னைகள்தான். இதில், ஒரே ஒரு சாதனை என்னவென்றால் டாஸ்மாக் விற்பனை அதிகரிப்பு மட்டும் தான்.
 
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 7 கொலைகள், 70 கொள்ளைகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்காக இடஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வந்தது திமுக தலைவர் கருணாநிதிதான். ஆனால், தான் கொண்டு வந்ததாக ஜெயலலிதா கூறிவருகிறார்.
 
தலைமைச் செயலகம் செயல்படுவதற்காக கட்டிய கட்டடத்தை ஜெயலலிதா பல்நோக்கு அரசு மருத்துவமனையாக மாற்றி பல கோடி ரூபாய்களை வீணாக்கியுள்ளார். இதில் வேலைவாய்ப்புக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு இடஒதுக்கீட்டு முறையை கடைபிடிக்க முடியாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இது இடஒதுக்கீட்டு முறைக்கும், தமிழக மக்களின் உரிமைக்கும் எதிரான செயலாகும். இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தாததால் வருங்காலங்களில் இடஒதுக்கீடே இல்லாமல் போகும் நிலை ஏற்படும்.
 
பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலம் அனைத்து பொருட்களின் விலைவாசியையும் உயர்த்தியது அதிமுகதான். ஆனால், விலைவாசியை மத்திய அரசுடன் இணைந்து உயர்த்தியது திமுகதான் என பழி போடுகிறார் ஜெயலலிதா. இந்த செயல்களுக்கு எல்லாம் தமிழக மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர். அவர்கள் வருகின்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார் கனிமொழி.