பொது இடங்களில் பிச்சை எடுத்தால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

Suresh
செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (16:24 IST)
பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
 
சென்னை உயர்நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எழில்முருகன் என்பவர் பொதுநலமனு தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு பிச்சை எடுப்பு தடுப்பு சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக செயல்படுத்த உள்துறை செயலாளர், தலைமை செயலாளர், காவல்துறை ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்.
 
அப்போது, இதே கோரிக்கைகளை கொண்ட மனு கடந்த 2006ஆம் ஆண்டு இந்த நீதிமன்றத்தில் தொடரப்பட்டபோது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சாலைகளில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள், குழந்தைகள் நல அமைப்புகளிடம் ஒப்படைக்கப் படுகின்றனர் என்றும், மாவட்டத்துக்கு ஒரு பிச்சைக்காரர்கள் காப்பகம் கட்டப்படுவதாகவும் கூறியிருந்ததாகக் குறிப்பிட்டனர்.
 
இதற்காக 70 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதகவும், பொதுஇடங்களிலும், வழிபாட்டு தலங்களிலும் பிச்சை எடுப்பவர்களை பிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, பின்னர் அவர்களை முகாம்களில் அடைத்து வருவதாகவும், பிச்சை எடுப்பதை தடுக்கும் அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் கூறப்பட்டிருந்தது.
 
எனவே, இந்த வழக்கில் மேற்கொண்டு புதிய உத்தரவுகளை பிறப்பிக்க நாங்கள் விரும்பவில்லை என்றும், அதேவேளை, இந்த நீதிமன்றத்தில், அப்போது தமிழகஅரசு தாக்கல் செய்த பதில் மனுவின் அடிப்படையில், பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.