திமுக கட்சி கூட்டங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்- சீமான் கண்டனம்

Sinoj

சனி, 24 பிப்ரவரி 2024 (13:03 IST)
திமுக கட்சிக் கூட்டங்களுக்கு கூட்டம் காண்பிப்பதற்காக சென்னை மாநிலக்கல்லூரியில் பயிலும் மாணவர்களை கடந்து மூன்று ஆண்டுகளாகக் கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்றுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. என்று சீமான தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

சென்னையின் புகழ்மிக்க அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் கடற்கரையில் அமைந்துள்ள மாநிலக்கல்லூரி, ஆங்கிலேயரால் 1840 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரியாகும்.

"சென்னை பல்கலைக்கழகத்தின் தாய்" என்று அழைக்கப்படும் மாநிலக்கல்லூரி பல நூற்றுக்கணக்கான சான்றோர்கள், ஆய்வறிஞர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மொழியியல் ஆராய்ச்சியாளர்கள், கணித வல்லுநர்கள், நோபல் பரிசு வென்ற அறிவியலாளர்கள் என மாபெரும் அறிஞர்கள் பலரை உருவாக்கிய பெருமையுடையது. அத்தகைய புகழ்மிக்க மாநிலக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியரை திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றது.

முதல் தங்களது அரசியல் சுயநலத்திற்குப் பயன்படுத்திக்கொண்டது தற்போதைய மாணவர்களின் அறப்போராட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திமுகவின் இளைஞரணித் தலைவரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியான சேப்பாக்கத்தின் எல்லைக்குள் "மாநிலக் கல்லூரி" அமைந்துள்ள காரணத்தால் அங்கு நடைபெறும் திமுக கட்சிக் கூட்டங்களுக்கு கூட்டம் காண்பிப்பதற்காக மாநிலக்கல்லூரியில் பயிலும் மாணவர்களை கடந்து மூன்று ஆண்டுகளாகக் கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்றுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

நாட்டின் வருங்காலச் சிற்பிகளான, மாணவர்களை அவர்களின் விருப்பம் இல்லாமல் ஆளுங்கட்சி தமது அரசியல் சுயநலத்திற்குப் பயன்படுத்துவதென்பது அருவெறுக்கத்தக்கது. ஆளுங்கட்சியினரின் இத்தகைய அதிகார அத்துமீறல் குறித்து அங்கு பயிலும் மாணவர்கள் தமிழ்நாடு அரசிடம் பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடானது. மாநிலக்கல்லூரியில் பயிலும் மாணவச்செல்வங்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் எடுக்காத திமுக அரசு, தேய்ந்து வரும் திராவிட அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்க இத்தகைய தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. திமுகவின் இத்தகைய மலிவான அரசியல் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்களை மாநிலக் கல்லூரி முதல்வர் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளதும் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆகவே, திமுக அரசு படிக்கும் மாணவர்களின் நேரத்தை வீணடித்து அவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் அரசியல் தன்னலச்செயல்பாடுகளை அறவே கைவிட வேண்டுமெனவும், மாணவர்களை இழிவுபடுத்திய கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், மாநிலக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் முன்வைக்கும் கல்வி பயில்வதற்கான அடிப்படைத்தேவைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்