தமிழகத்தில் அப்படி எந்த அலையும் வீசவில்லை - மு.கருணாநிதி

Ilavarasan
வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (12:00 IST)
தமிழகத்தில் ஏதோ அலை வீசுவதாக கூறுகின்றனர். நானும் சுற்றிப் பார்த்தேன். அப்படி எந்த அலையும் வீசவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
 
காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சிபுரத்தில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
 
நீண்ட நாள் கழித்து காஞ்சிபுரத்துக்கு வந்துள்ளேன். என் தலைவர், நம் தலைவர் பேரறிஞர் அண்ணா இல்லத்துக்கு சென்று அவரிடம் முதலில் வாழ்த்து பெற்று, என்னுடைய பழைய நினைவுகளை அங்கே 
 
அசைபோட்டுவிட்டு இங்கு வந்தேன்.
 
மொழி, இனம், மதச்சார்பற்ற உணர்வு கொண்ட தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. தமிழகத்தில் ஏதோ ஒரு அலை வீசுவதாக கூறுகின்றனர். நானும் சுற்றித் திரிந்து பார்த்தேன் எனக்கு எந்த அலையும் 
 
தெரியவில்லை. மோடி அலை வடக்கே இருந்து புறப்பட்டு தமிழகத்தை நோக்கி வருகிறது என்கிறார்கள். அந்த அலை காங்கிரஸ் கட்சியை கலங்கடித்துவிட்டு, இங்கே உள்ள புரட்சிக்காரர்களை புரட்டிப் 
 
போட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
 
மோடி சொல்கிறார், குஜராத் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார். திமுக ஆட்சி காலத்தில் 2009-2010-ஆம் ஆண்டில் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதம். இது 2010-11-இல் 11.1 சதவீதமாக 
 
அதிகரித்தது.
 
இதை திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள ஆவணம் கூறுகிறது. அதே வளர்ச்சி 2011-2012 அதிமுக ஆட்சி காலத்தில் 7.4 சதவீதமாக குறைந்தது.
 
2012 - 2013-இல் 4.14 சதவீதமாக குறைந்தது. இதுவும் திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள ஆவணப்படியே கூறுகிறேன். ஏராளமான கார் கம்பெனிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தேன். அதன் மூலம் 3 லட்சம் 
 
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. திமுக, முஸ்லிம்களுக்கு போதிய இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்கி வருகிறது. ஆனால் ஜெயலலிதா கட்சியில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஒரு இடம் 
 
கூட இல்லை.
 
திமுக என்றும் மதச்சார்பற்ற கொள்கை உடையது என்று மார்தட்டிச் சொல்வோம். மதச்சார்பற்ற கொள்கையில் நிலையான உறுதியான தன்மையைக் கொண்டுள்ளோம். ராமருக்கு கோயில் கட்டுவோம் 
 
என்கிறது பாஜக, பாபர் மசூதியை இடித்துவிட்டுதான் அந்த கோயிலை கட்ட வேண்டுமா? வேறு இடம் இல்லையா?
 
ஜெயலலிதாவும், சசிகலாவும் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக 1996-ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு உயர்நீதிமன்றத்தை அணுகினர். பின்னர் உச்சநீதிமன்றத்தை அணுகினர். தேர்தல் பிரசாரம் என்று வாய்தா 
 
வாங்குகின்றனர். எத்தனை காலம்தான் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியும்? நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் வகையில் இந்த வழக்கில் தீர்ப்பு இருக்கும் என்றார் கருணாநிதி.
 
இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். நகரச் செயலர் சேகரன் 
 
வரவேற்றார். மாவட்டச் செயலர் தா.மோ. அன்பரசன் தலைமை வகித்தார்.