சசிகலா வாங்கிய சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: வைகோ கோரிக்கை

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2015 (23:59 IST)
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பம் வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
 
இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள பிரபல லக்ஸ் திரையரங்க வளாகத்தை ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் என்ற அதிர்ச்சிகரமான தகவல் உலா வருகிறது.
 
சென்னையில் எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் திரைப்படங்களைத் திரையிடும் பல திரையரங்குகளை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் 11 திரையரங்கங்களுடன் கூடிய பிரம்மாண்டமான லக்ஸ் திரையரங்கு வளாகம் உள்ளது.
 
எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனம் தனக்குச் சொந்தமான லக்ஸ் திரையரங்க வளாகத்தை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது.
 
ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் இதற்கு முன்பு ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடட் என்று இயங்கியது. இந்த நிறுவனம் கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 
கடந்த 2014 ஜூலை 14 இல் நடந்த இந்த நிறுவனத்தின் சிறப்பு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி ‘ஜாஸ் சினிமாஸ்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த சிறப்புப் பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் கலந்து கொண்டதும், நிறுவன பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தில் சசிகலா கையெழுத்துப் போட்டிருப்பதும் ஆவணங்கள் மூலம் வெளிப்படையாக தெரிய வருகிறது.
 
ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தில் கார்த்திகேயன் கலியபெருமாள், சிவக்குமார் கூத்தையப்பர், சத்தியமூர்த்தி ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.
 
இவர்கள் அனைவருமே மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரிஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் இயக்குநர்களாகவும் உள்ளனர். மிடாஸ் நிறுவனம் சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது உலகறிந்த உண்மையாகும்.
 
எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்தின் சொத்துக்கள் பி.வி.ஆர். சினிமாஸ் என்ற நிறுவனத்தால் ரூ.600 கோடி முதல் ரூ.1000 கோடி வரையில் விலை பேசப்பட்டதாகவும், ஆனால், சசிகலா சம்பந்தப்பட்டுள்ள ஜாஸ் சினிமாஸ் அதே அளவு தொகைக்கு வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
எனவே, ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பம் இது போன்று வாங்கிக் குவித்துள்ள சொத்துக்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.