கூட்டணியைப் பிரிக்க நடக்கும் சூழ்ச்சிகள் பலிக்காது - விஜயகாந்த்

Ilavarasan
செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (12:39 IST)
தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பிரிக்க நடக்கும் சூழ்ச்சிகள் பலிக்காது என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
 
கரூர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனை ஆதரித்து கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
 
திமுக, அதிமுக மாறி, மாறி ஆட்சிக்கு வந்தாலும் கரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரியோ, அரசுப் பொறியியல் கல்லூரியோ கொண்டு வரவில்லை. உங்களைத்தான் சுரண்டிக் கொண்டு 
 
இருக்கிறார்கள்.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதியிலும் வெற்றி பெறச்செய்து மோடியை பிரதமராக்குங்கள். மற்றவர்களைப் போல எழுதி வைத்ததைப் பேசும் வழக்கம் எனக்கு இல்லை. எனக்குத் தோன்றுவதைப் 
 
பேசுவேன்.
 
தமிழகத்தில் குடிநீர், மின்சார, சுகாதார பிரச்னை உள்ளது. மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததும் போராடியாவது, இந்த பிரச்னைகளைத் தீர்ப்பேன். வாய்ப்பளித்தால் தங்கத் தட்டில் வைத்து 
 
உங்களைத் தாங்குவேன்.
 
கருணாநிதியை, ஜெயலலிதாவை முதல்வராக்கினீர்கள், எந்த ஒரு நல்லதும் அவர்கள் செய்யவில்லை. கரூரில் சாயப்பட்டறை பிரச்னை தீர்க்க எதுவும் செய்யவில்லை. மாவட்டத்தின் முக்கியத் தொழிலான 
 
கொசுவலை, ஜவுளித் தொழில் நசிந்து வருகிறது.
 
இரு கட்சிகளும் மணல் கொள்ளை மூலம் சம்பாதித்து வருகின்றன. அவர்களைப் புறக்கணியுங்கள். இப்பகுதியில் உள்ள தாதம்பாளையம் ஏரியை தூர்வாரி அமராவதி தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை 
 
எடுப்பேன். குஜராத் 15 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல தற்போது இல்லை. மோடி திறமையாக ஆட்சி செய்து குடிநீர், மின்சாரப் பிரச்னைகளைத் தீர்த்துள்ளார். சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி 
 
நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் சூரிய ஒளி மூலம் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதாகக் கூறினார்கள். ஆனால், ஒரு மெகாவாட்கூட உற்பத்தி செய்யவில்லை.
 
தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். மக்கள் ஏமாந்து கொண்டே இருக்கின்றனர். அதிமுகவை நம்பினால் என்ன கதி என்பதற்கு நானே உதாரணம். நான் ஜாதி, மதத்தை 
 
நினைக்கவில்லை. மக்களை நினைக்கிறேன்.
 
மக்களை அவர்களிடம் சிக்க விடாமல் தப்பிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தமிழ்நாடு முன்னேற உழைப்பேன். முதல்வர் ஜெயலலிதா முன்னேற்றம் என்று சொல்கிறார்கள். எதில் முன்னேற்றம் 
 
ஊழலிலா, மின் தட்டுப்பாட்டிலா, வேலையின்மையிலா, தண்ணீர் தட்டுப்பாட்டிலா?
 
முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு நடக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்தார். ஆனால், எல்லோரும் நடித்துக் கொண்டே இருக்கிறார்கள், 
 
புரிந்து கொள்ளுங்கள். எங்களைப் பிரிக்க சூழ்ச்சி நடக்கிறது.
 
ஆனால், அது பலிக்காது, முரசு கொட்டக் கொட்ட தாமரை மலரும், மாம்பழம் பழுக்க, பழுக்க தாமரை மலரும், பம்பரம் சுற்றச் சுற்ற தாமரை மலரும். அனைவரும் தேமுதிக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.