பெண் என்ஜினீயர் கொலை: கொடூரமாக கற்பழித்து கொன்றவர்களின் வாக்குமூலம்
புதன், 26 பிப்ரவரி 2014 (10:33 IST)
சென்னை கேளம்பாக்கம் சிறுசேரியில் பெண் என்ஜினீயர் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த கொடூர கொலையாளிகள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
FILE
சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ஓய்வுப்பெற்ற ஓவிய ஆசிரியர். அவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 23). இவர், கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார்.
கடந்த 13-ந்தேதி அன்று இரவு காணாமல் போன இவர், கடந்த 22-ந்தேதி சனிக்கிழமை சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்கா அருகே உள்ள முட்புதரில் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். உமாமகேஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து, அடிவயிறு ஆகிய இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.
இதனால் உமாமகேஸ்வரி கற்பழித்து, கழுத்தறுத்து, குத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தையே உலுக்கிய இக்கொலை சம்பவம் குறித்து டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யமூர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் தடவியியல் நிபுணர் குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம் டி.எஸ்.பி. மோகன் மேற்பார்வையில் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், சூப்பிரண்டுகள் நாகஜோதி, அன்பு, கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்காக சிறுசேரி வந்த அவர்கள் சம்பவ இடத்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தொழிற்நுட்ப பூங்காவை ஒட்டியுள்ள அந்த இடத்தினை சுற்றி நைலான் கயிறுகள் மூலம் கட்டி ஒவ்வொரு பகுதியாக அலசி ஆய்வுசெய்து தடயங்களை சேகரித்தனர்.
FILE
இந்த நிலையில், உமாமகேஸ்வரி பயன்படுத்திய செல்போன் எண்ணிலிருந்து முக்கிய தடயங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, சிறுசேரி பகுதியில் கட்டிட வேலைசெய்துவரும் வெளிமாநில வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிறுசேரி சுற்றுவட்டார பகுதியில் வேலைப்பார்த்து வரும் வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கொலையாளிகள் ரயில் மூலம் வெளிமாநிலங்கள் தப்பிச்செல்வதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின்பேரில், நேற்று ஏராளமான காவலர்கள் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.
பின்னர் தப்பி செல்ல முயன்ற கொலையாளிகள் மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ராம் மண்டல் (23), உத்தம்மண்டல் (23) ஆகிய இருவரும் நேற்று காலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களை கேளம்பாக்கம் பகுதியில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொடூர கொலையாளிகள் ராம் மண்டல், உத்தம்மண்டல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அவர்களுடைய கூட்டாளிகள் இருவரை தேடி வருவதாகவும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலையாளிகள் இருவரிடமும் நடத்திய விசாரணையில், உமாமகேஸ்வரி கொடூரமாக கற்பழிக்கப்பட்டதும் தெரியவந்தது. கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
வாக்குமூலம் விவரம் வருமாறு, நாங்கள் கடந்த ஒரு ஆண்டாக சிறுசேரி சிப்காட் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு தினமும் ரூ.500 கூலி கிடைக்கும். தினமும் இரவு வேலை முடிந்ததும் மது அருந்துவோம். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நாங்கள் போதையில் சிப்காட் வளாகத்தில் பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தோம்.
FILE
அப்போது நள்ளிரவு நேரம். உமா மகேஸ்வரி சாலையில் தனியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் நாங்கள் கிண்டல் செய்தோம். நாங்கள் இந்தி சினிமா பாட்டை பாடி அவரது கையைப்பிடித்து இழுத்தோம்.
இதில் கோபம் அடைந்த உமா மகேஸ்வரி, எங்களை செருப்பால் அடித்தார். இதை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் பார்த்து கூட்டமாக கூடினார்கள். இதனால் நாங்கள் தப்பி ஓடிவிட்டோம்.
உமாமகேஸ்வரி, எங்களை தாக்கியது எங்களுக்குள் ஒரு வெறியை உண்டாக்கியது. அவரை எப்படியாவது அடைந்தே தீரவேண்டும் என்று உறுதி எடுத்தோம். எங்கள் சபதம் நிறைவேறும் விதமாக 13-ந்தேதி அன்று இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வந்தார்.
போதை மயக்கத்தில் இருந்த நாங்கள், அவரை அடித்து உதைத்து கீழே தள்ளினோம். பின்னர் அவரது வாயை பொத்தி அலாக்காக குண்டுகட்டாக தூக்கினோம். அருகில் உள்ள புதர் மறைவுக்கு தூக்கிச்சென்றோம். அவரை பாலியல் பலாத்காரம் செய்தோம். அவர் கூச்சல்போட்டு கத்தி கலாட்டா செய்தார். இதனால் அவரது வாயை பொத்திக்கொண்டும், கை, கால்களை அமுக்கி பிடித்துக்கொண்டும் உல்லாசம் அனுபவித்தோம்.
எங்கள் காம இச்சை தணிந்தபோது, உமா மகேஸ்வரி மயக்கமானார். அடுத்து அவரை அப்படியே விட்டுவிட்டு போவதா, அல்லது கொலை செய்வதா என்று யோசித்தபடி இருந்தோம். இதற்குள் உமா மகேஸ்வரி மயக்கம் தெளிந்து கூச்சல் போட்டார். எங்களது முகத்தில் எச்சில் துப்பினார்.
FILE
அவரை உயிரோடு விட்டால் எங்களை காவல்துறையில் சிக்கவைத்துவிடுவார் என்று பயந்தோம். இதனால் நாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது அடிவயிற்றில் குத்தினோம். அவரது உயிர் போகவில்லை. இதனால் கழுத்தை அறுத்தோம். பின்னர் உமா மகேஸ்வரியின் உடலை அங்கே போட்டுவிட்டு, தப்பிவிட்டோம்.
நாங்கள் இருவரும் கல்பாக்கத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தோம். பத்திரிகைகளில் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி எதுவும் வரவில்லை. எங்களது கூட்டாளிகள் மற்ற இருவரும் தனியாக சென்றுவிட்டனர். கடந்த 2 நாளுக்கு முன்பு பத்திரிகை செய்தியை தமிழ் தெரிந்தவர்கள் மூலம் படித்தபோது உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட செய்தி வந்தது.
இருந்தாலும், கொலையாளிகள் யார் என்பது பற்றி காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை என்று செய்தியில் கூறப்பட்டிருந்தது. இதனால் தைரியமாக இருந்தோம். தப்பிச்செல்லும்போது உமா மகேஸ்வரியின் செல்போனையும், வங்கி கிரெடிட் கார்டையும் எடுத்து வந்துவிட்டோம். நாங்கள் தங்கியிருக்கும் இடம் தெரிந்து காவல்துறையினர் எங்களை கைது செய்துவிட்டனர் என்று வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நேற்று இரவு மேலும் ஒரு கொலையாளி கைது செய்யப்பட்டதாக தெரிய வந்தது. அவரும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். இன்னொரு கொலையாளி ரயில் மூலம் மேற்கு வங்காள மாநிலத்துக்கு தப்பி சென்றுவிட்டான்.
அவனை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. தனிப்படை காவல்துறையினர் நேற்று விமானத்தில் கொல்கத்தா விரைந்தனர். அந்த கொலையாளி ரயிலை விட்டு இறங்கும்போது மடக்கிப்பிடிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள கொலையாளிகள் உத்தம்மண்டல், ராம் மண்டல் இருவரும் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டியதிருப்பதால் கொலையாளிகளின் புகைப்படத்தை வெளியிட சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது அவர்களை படம்பிடித்துக்கொள்ளுங்கள் என்று சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் கூறிவிட்டனர். மிகப்பெரிய சவாலாக இருந்த இந்த வழக்கில் கொலையாளிகளை பிடித்து காவல்துறையினர் சாதனை படைத்து விட்டனர். இதற்காக டி.ஜி.பி. ராமானுஜம், சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரையும், காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறையினரையும் பாராட்டினார்.