கேரளாவுக்கு செல்லும் 13 சாலைகளில் இன்று மறியல் போராட்டம் நடந்ததால் இரயில் மூலம் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால் உள்ளிட்டவற்றை கொண்டு செல்லப்பட்டது.
தமிழகத்தில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த மலையாள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உதவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவுக்கு செல்லும் 13 வழித்தடங்களிலும் இன்று வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கேரளாவுக்கு காய்கறிகள், பழங்கள், உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவது அடியோடு நிறுத்தப்பட்டது.
இதனால் கேரள வியாபாரிகள் ஈரோடு, கோவை இரயில் நிலையத்திலிருந்து இரயில்களின் மூலமாக காய்கறிகள், பழங்கள், அத்தியாவசியமான உணவுப்பொருட்களை கேரளாவுக்கு எடுத்து சென்றனர்.
பெங்களூர் - எர்ணாகுளம் இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ், கோவை - கண்ணனூர் பாசஞ்சர், கோவை - பாலக்காடு பாசஞ்சர், மங்களூர் -கண்ணனூர் எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவை -திருச்சூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல இரயில்களில் சரக்குகளை கேளர வியாபாரிகள் அனுப்பி வைத்தனர்.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல தமிழகத்தில் உள்ள இரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் மலையாள அதிகாரிகள் இதற்கு உதவியதாக தெரியவந்துள்ளது. இதற்காக, கண்ணனூர் கோவை பாசஞ்சரில் கூடுதலாக மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.