கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மீண்டும் போராட்டம் தொடர்கிறது
சனி, 1 அக்டோபர் 2011 (10:22 IST)
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அடுத்த கட்ட போராட்டம் குறித்து போராட்டக்குழு நாளை முடிவு செய்கிறது. தென் தமிழகத்தில் திடீரென அமல்படுத்தியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அமைச்சரவை கூடங்குளம் அணுமின் நிலைய வேலைகளை நிறுத்தச் சொல்லி தீர்மானம் இயற்றிய பிறகும் அங்கு வேலைகள் தொடர்ந்து நடைபெறுவது தமிழக முதலமைச்சரையும், அமைச்சர்களையும், தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். எனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அனைத்து வேலைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக பிரதமரை சந்திக்க போராட்டக்குழுவை டெல்லிக்கு அழைத்துச் செல்வதாக மாநில அரசு உறுதி அளித்தது. மத்திய அரசின் சார்பில் மத்திய அமைச்சர் நாராயணசாமி பேச இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இன்றுவரை மத்திய - மாநில அரசுகள் இது பற்றி முயற்சிகள் எடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தொடங்கிய பிறகு, தென் தமிழகத்தில் திடீரென அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இது மக்கள் போராட்டத்துக்கு எதிராக மக்களை திசை திருப்புகின்ற செயலாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே அறிவிக்கப்படாத மின்வெட்டை திரும்ப பெற வேண்டும்.
மக்கள் வாழ்வையும், வாழ்வாதாரங்களையும் அழிக்கின்ற அணுசக்தி திட்டத்தை கைவிட்டு விட்டு மாற்று முறைகளான சூரியஒளி, காற்றாலை, கடல் அலை மூலம் மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களுக்கும் தொழில் முறைகளுக்கும் எந்த இடைïறும் செய்யாமல் மின்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்திய அணுமின் கழகம், கூடங்குளம் அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்று தொடர்ந்து சொல்லி வருகிறது. அப்படியானால் 1986ஆம் ஆண்டு நடந்த செர்நோபில் அணு உலை விபத்துக்கு பிறகு ரஷ்யாவில் புதிய அணு உலை கட்டப்படாதது எதற்காக? கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் மிகவும் ஆபத்தான, 48 ஆயிரம் ஆண்டுகள் பாதுகாக்கப்பட வேண்டிய பல்லாயிரம் டன் எடையுள்ள அணு கழிவுகளை என்ன செய்யப்போகிறோம் என்பது பற்றி மத்திய அரசும், அணுமின் கழகமும் சிந்திக்காமல் இருப்பது ஏன்?
முப்பது ஆண்டுகள் மின்சாரம் தயாரித்த பிறகு கதிரியக்கம் மிகுந்த இந்த உலைகளை பல நூறு ஆண்டுகள் பாதுகாப்பது பற்றி பேசாமல் இருப்பது ஏன்? உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை 7.10.2011க்குள் கட்சியின் உயர்மட்டக்குழுவை கூட்டி, கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனே மூடிவிட தீர்மானம் நிறைவேற்றும் கட்சிகளுக்கே வாக்களிக்க மக்கள் முடிவெடுத்துள்ளனர்.
அணுஉலை போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இடிந்தகரையில் மாபெரும் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய நாள் அணு உலை போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.