மூன்றாவது அணி அமைந்தது-விஜயகாந்த் மகிழ்ச்சி

செவ்வாய், 27 செப்டம்பர் 2011 (17:37 IST)
தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன்பாடு செய்துகொண்டுள்ள விஜயகாந்த், 3வது அணி உருவானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்ததால் அதிருப்திக்கு உள்ளானது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றொரு தோழமை கட்சியான தே.மு.தி.க.வுடன் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதன்படி இன்று பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

அதன்படி தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சேர்ந்து போட்டியிடும் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூட்டாக அறிவித்தனர்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 25 நகராட்சிகளும், 61 பேரூராட்சிகளும் ஒதுக்கப்பட்டது. வார்டுகள் ஒதுக்கீடு குறித்து மாவட்ட தலைவர்கள் முடிவு செய்வார்கள் என விஜயகாந்த் அறிவித்தார்.

இன்று மாலை 4.00 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாகவும், திருச்சி இடைத்தேர்தலைப் பற்றி சிந்திக்க நேரமில்லை எனவும், 3வது கூட்டணி அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்