சோனியா சந்திப்பில் முக்கியத்துவம் இல்லை: ரங்கசாமி
வெள்ளி, 24 ஜூன் 2011 (13:26 IST)
''காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் கிடையாது'' என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
டெல்லி சென்றிருந்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று நள்ளிரவில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தேர்தலில் வெற்றி பெற்று, முதலமைச்சர்களாக பதவி ஏற்பவர்கள், டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம்.
அப்போது, மாநிலத்துக்கு தேவையான நிதியை கேட்டுப் பெறுவார்கள். அந்த அடிப்படையில் தான், முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, நானும் டெல்லி சென்று பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்தித்துப் பேசினேன்.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் மத்திய அரசின் உதவியுடன் தான், திட்டங்களை செயல்படுத்த முடியும். புதுச்சேரியின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் தான் நான் டெல்லி சென்று திரும்பியுள்ளேன். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்ததில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் கிடையாது என்றார்.
காங்கிரஸ் கட்சியுடன், என்.ஆர்.காங்கிரஸ் இணைக்கப்படுமா? என்று கேட்டதற்கு, இதற்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம், எனக்கு நேரமாகி விட்டது. புறப்படுகிறேன்” என்று கூறி விட்டு ரங்கசாமி காரில் ஏறி சென்றுவிட்டார்.