கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் விடுவிப்பு
வியாழன், 23 ஜூன் 2011 (11:20 IST)
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது அப்போதைய சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஷாஜகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், மனோஜ்பாண்டியன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து 4 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அரசாணையை அரசு பிறப்பித்தது.
இந்த அரசாணையை சென்னை நகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜெகன், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சபாநாயகர் ஜெயக்குமார், மனோஜ்பாண்டியன் எம்.பி. ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி அவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.தேவதாஸ், இந்த வழக்கை திரும்ப பெறுவதற்கு சென்னை நகர குற்றவியல் அரசு வழக்கறிஞருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள 4 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.