ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகம், அலுவலகங்களில் தாக்குதல் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்யும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகம், அலுவலகங்களில் தாக்குதல் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அலுவலகத்திற்கு வரும் அனைவரும் தீவிர விசாரணைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேபோல் வேப்பேரி- பூந்தமல்லி சாலையில் உள்ள இலங்கை வங்கி, அழகப்பா சாலையில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம், எழும்பூர் கென்னத்லேனில் உள்ள இலங்கை புத்த துறவி மடம் ஆகிய இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம், புத்த துறவி மடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.