காதலர் தின கொண்டாட்டம் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானது என்றும், தமிழ் பண்பாட்டை பேணி பாதுகாக்க விரும்புவோர்கள் அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும் என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல.கணேசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து வாழ்ந்து வரும் மூத்தகுடி தமிழ்குடி என்று பேசுகின்றோமே! தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணரா இயல்புடையவள் பாரதத்தாய் என்று பாடுகிறோம்! இவற்றுக்கு என்ன பொருள்?
எது தோன்றியது? எது இன்று வரை வாழ்ந்திருக்கிறது? நாம் தமிழர் அல்லது நாம் இந்தியர் என்று பெருமைப்படும் அடையாளத் தன்மை எது? அதுதான் பண்பாடு அல்லது கலாச்சாரம். தமிழ்ப்பண்பாடு என்றாலும் ஹிந்துப் பண்பாடு என்று சொன்னாலும் ஒன்றுதான்.
அந்தப் பண்பாடு அழிந்தால் நம் அடையாளத்தை நாம் இழந்து விடுவோம். அந்த பண்பாட்டை அழிக்க முயற்சி நடைபெறுகின்றது. துரதிருஷ்டவசமாக பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் அறியாமை காரணமாக மக்களும் துணை போகிறார்கள்.
அதில் ஒரு பகுதி புத்தாண்டு அன்று நள்ளிரவு கேளிக்கைகள், காட்டுக் கூச்சல்கள், வரம்பு மீறல்கள். ஜனவரியில் அது என்றால் பிப்ரவரியில் காதலர் தினம். இதை தமிழ்ப் பண்பாட்டை பேணி பாதுகாக்க விரும்புபவர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்று இல.கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.