திருபுவனம் அஜித்குமார் விசாரணை மரணத்தில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன் தனது உயிருக்கு காவலர்களால் ஆபத்து இருப்பதாக பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருபுவனம் அருகே மடப்புரம் காளியம்மன் கோவிலில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்த அஜித்குமார், நகைகளை திருடியதாக விசாரணைக்கு போலீஸார் அழைத்துச் சென்ற நிலையில் மரணமடைந்தார். இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸார் அஜித்குமாரை அடித்து துன்புறுத்தியதை சக்தீஸ்வரன் என்பவர் மறைந்திருந்து வீடியோ எடுத்து ஷேர் செய்திருந்தார். நேற்று முன் தினம் நடந்த நீதிமன்ற விசாரணையிலும் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சக்தீஸ்வரன் தனக்கும் தன்னை சார்ந்தோருக்கும் பாதுகாப்பு வழக்கக் கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் சிலர் ரவுடிகளை வைத்து தன்னை மிரட்டியதாகவும், சிறையில் உள்ள காவலர் ராஜா ஏற்கனவே தன்னை மிரட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னையும் தான் சார்ந்தோருக்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Edit by Prasanth.K