இலங்கை பிரச்சனை : விடுதலை சிறுத்தை எம்.எல்.ஏ. பதவி விலகல் கடிதம்!
வெள்ளி, 7 நவம்பர் 2008 (16:36 IST)
இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் வரும் 10ஆம் தேதி கூட உள்ள சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது அவைத்தலைவர் ஆவுடையப்பனிடம் பதவிவிலகல் கடிதம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இலங்கை பிரச்சனைக்காக பதவி விலகிய முதல் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார்.
தமிழக சட்டப்பேரவைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2 உறுப்பினர்களில், கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செல்வம். இவர் விடுதலை சிறுத்தைகள் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் உள்ளார்.
தனது சொந்தத் தொகுதியான திட்டக்குடியில் இன்று உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் உரையாடிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் 10ஆம் தேதி கூட உள்ள சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது அவைத்தலைவர் ஆவுடையப்பனிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளதாக கூறினார்.
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈப்பதற்காக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகவும், இதற்குப் பிறகாவது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பதாகவும் குற்றம்சாற்றினார்.
இதனால் மத்திய அரசின் செயல்படாத நிலையைக் கண்டித்தும், அதன் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தான் பதவி விலகுவதாக அவர் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே பதவி விலகுவதாக வெளியான கருத்துக்களை அவர் நிராகரித்தார்.