கும்பகோணத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் நினைவாக, கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இந்த சோக சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவாக "நினைவு மண்டபம்' கட்ட வேண்டும் என குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற தமிழக அரசு நினைவு மண்டபம் கட்ட 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.
குடந்தை பாலக்கரையில் 10,000 சதுர அடி பரப்பளவில் நினைவு மண்டபம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது முடிவடைந்துள்ளது.
இதில் ரூ. 29.50 லட்சத்தில் நினைவுத் தூண் அமைக்கும் பணியை குடந்தை அரசு கவின் கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும், ரூ. 30.50 லட்சத்தில் தியான மண்டபம், அலங்கார மின் விளக்குகள், பூங்கா, சுற்றுச்சுவர் ஆகியன அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகமும் மேற்கொண்டன.
இந்த நினைவு மண்டபத்தை திறந்து வைத்து, அங்குள்ள தியான மண்டபத்திற்குச் சென்ற மு.க. ஸ்டாலின், உயிரிழந்த குழந்தைகளின் பெயர்ப் பலகையின் முன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.