இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த, மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு காடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு உணவு, மருந்துப் பொருள்களை ஐக்கிய நாடுகள் சபை மூலமே வழங்க வேண்டும் என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் சேகரித்து கொடுக்கப்படும் நிவாரண நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு போய்ச் சேருமா என்ற சந்தேகம் ஏற்படுவதால், அதனை மத்திய அரசு விளக்க வேண்டும். உரிய உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
இலங்கையில் நடக்கும் அத்துமீறலை தட்டிக் கேட்க முடியாத நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளதாகவும் நல்லகண்ணு குறை கூறினார்.