பதவி விலகல் முடிவு தள்ளிவைப்பு! முகர்ஜி கோரிக்கையை கருணாநிதி ஏற்றார்!

ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (20:49 IST)
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் தாக்குதலை நிறுத்தி, இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்புகளில் விலகுவது என்ற அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவை தள்ளிவைத்துள்ளதாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சோனியா காந்தியின் தூதராக சென்னைக்கு வந்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன்னைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, பதவி விலகல் முடிவை தள்ளிவைப்பதாகத் தான் அவரிடம் உறுதியளித்தாகக் கருணாநிதி கூறினார்.

பிரணாப் முகர்ஜியுடன் ஒன்றரை மணி நேரம் நடந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினால், அதன் காரணமாக நாட்டின் அரசியல் சூழலில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்று பிரணாப் முகர்ஜி கூறியதாகவும், அதற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு தங்களால் எந்த நெருக்கடியும் ஏற்படாது என்று தான் அவருக்கு உறுதியளித்ததாகவும் கூறினார்.

போர் நிறுத்தம் குறித்து மேலும் விவாதிக்க வேண்டியதுள்ளது என்று கூறிய கருணாநிதி, அந்த முயற்சியை இந்தியா எடுப்பதா அல்லது வேறொரு நாடு அல்லது அமைப்பு எடுப்பதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

போர் நிறுத்தத்தை கொண்டுவருவது தொடர்பான வழிமுறைகளை முடிவு செய்வதில் எந்தத் தடையும் இல்லை என்றும் கருணாநிதி கூறினார்.

போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் நார்வே துவக்குமா என்று கேட்டதற்கு, அப்படிப்பட்ட திட்டம் எதையும் நார்வே முன்வைக்கவில்லை என்றும், இதுபற்றி கருத்து தெரிவித்த பிரணாப் முகர்ஜி, 40 ஆண்டுக்காலமாக நீடிக்கும் பிரச்சனைக்கு 4 நாட்களில் தீர்வு காண முடியாது என்று கூறியதாக கருணாநிதி கூறினார்.

டெல்லி வந்துள்ள சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் தூதர் ஃபசில் ராஜபக்சவுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி தன்னிடம் விளக்கியதாகவும், சிறிலங்க அரசின் சார்பாக அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டாலே தனக்குத் திருப்திதான் என்று கருணாநிதி கூறினார்.

இன்று காலை பிரணாப் முகர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஃபசில் ராசபக்ச, இலங்கைத் தமிழர்களின் மனிதாபிமான தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிட ராஜபக்ச அரசு உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளார். அதனை பின்னர் செய்தியாளர்களிடமும் அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்