கருணாநிதியுடன் தொலைபேசியில் சோனியா பேச்சு! பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார்!

ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (18:31 IST)
இலங்கைத் தமிழர் பிரச்சனைத் தொடர்பாக தமிழக முதலமைச்சர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விவாதித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கையில் தற்போது நிலவும் சூழல் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும், இலங்கைத் தமிழர்களைக் காக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சோனியா முதல்வரிடம் விளக்கியதாகவும் தெரிவிக்கிறது.

இப்பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை சென்னை வருகிறார் என்றும் முதல்வரிடம் சோனியா தெரிவித்ததாகவும், தமிழர்களைக் காக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்காக சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு கருணாநிதி நன்றி தெரிவித்துக்கொண்டதாகவும் அச்செய்திக் குறிப்பு கூறுகிறது.

இன்று காலை டெல்லி வந்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் தூதர் ஃபசில் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பேச்சுவார்த்தையின் விவரங்களை முதல்வருககுத் தெரிவிக்க சென்னை வருகிறார்.

இலங்கையி்ல் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் நிறுத்தப்பட்டு, இரண்டு வார காலத்தி்ற்குள் போர் நிறுத்தம் அறிவிக்க மத்திய அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்று வலியுறுத்திய தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவேற்றியத் தீர்மானம், அப்படி நடக்கவில்லையென்றால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவது என்று முடிவெடுத்தது. அந்த இரண்டு வார கெடு 29ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்