தமிழினப் படுகொலையைக் கண்டித்து 31இல் கடையடைப்பு: வணிகர் சங்கம்!

ஞாயிறு, 26 அக்டோபர் 2008 (03:53 IST)
இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலையைக் கண்டித்து தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி முழு கடையடைப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக வணிகர் சங்கப் பேரவையின் தலைவர் வெள்ளையன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், சிறீலங்கா அரசின் ஈவு இரக்கமற்ற இனப் படுகொலையைக் கண்டித்தும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரியும் இந்தக் கடையடைப்பு நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தமிழ் மக்களின் உயிரோடும், உணர்வோடும் தொடர்புடைய போராட்டம் என்பதால் இந்தக் கடையடைப்பு போராட்டத்தில் எந்த வர்த்தகப் பிரிவுக்கும் விதிவிலக்கு வழங்கப்படாது. மிகச் சிறிய டீக்கடை முதல் மிகப்பெரிய நகைக்கடைகள் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளும் அக்டோபர் 31ஆம் தேதி அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்