விழுப்புரத்தில் கிறிஸ்தவ கல்லறைகள் உடைப்பு: 2 பேர் கைது!
வியாழன், 9 அக்டோபர் 2008 (12:42 IST)
விழுப்புரம் மாவட்டம் காட்பாடியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கல்லறைகளை உடைத்து சேதப்படுத்தினர். இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி ரயில்வே கேட் அருகில் உள்ள இந்த கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் அத்துமீறி நுழைந்த சில மர்ம நபர்கள் அங்கிருந்த கல்லறைகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்து கல்லறை சேதப்படுத்தப்பட்டதுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு மர்ம நபர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கல்லறை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுந்தம்பாடியில் 4 பேர் கைது!
ஈரோடு மாட்டம் கவுந்தம்பாடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒன்று கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் கிறிஸ்தவ தேவாலயத்தின் பிரார்த்தனைக் கூட கண்ணாடிகள் உடைந்து சிதறியது.
இதேபோல் பெருந்தலையூரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியை மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்தியது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய தனிப்படை காவல்துறையினர், இந்து முன்னணி நகர செயலர் நாகராஜன், பொறுப்பாளர் சிவசக்தி, மருதாசலம், ராஜா ஆகியோரை கைது செய்துள்ளனர்.