ஒகேனக்கல் திட்டத்தை அரசியலாக்காதீர்கள்: கர்நாடகாவுக்கு அன்புமணி வேண்டுகோள்!
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (17:01 IST)
தருமபுரி, கிருஷ்ணகிரி மக்களின் தாக்கத்தை தீர்க்க உதவும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி, கர்நாடக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பெறப்படும் தண்ணீர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படும், விவசாயத்திற்காக பயன்படுத்தப்படாது என்றார்.
மேலும், இத்திட்டத்தின் கீழ் காவிரியில் இருந்து தமிழகத்திற்காக தண்ணீரை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள உள்ளதாகவும், கர்நாடகாவின் காவிரிப் பங்கை தமிழக அரசு பயன்படுத்தாது என்றும் அன்புமணி குறிப்பிட்டார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் இத்திட்டத்தை நிறைவேற்ற கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு ரூ.1,330 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து, அப்பகுதி தங்களுக்கு சொந்தமானது என கர்நாடக அரசு உரிமை கோரி வருகிறது. இதன் காரணமாக இரு மாநில மக்களிடையே கசப்புணர்வு ஏற்பட்டுள்ளதுடன், இத்திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.