ஜெ. மீதான வழக்குகள் ஜோடிக்கப்பட்டதா? டான்சியே பதில்: முதல்வர்!

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (16:28 IST)
டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதா வசம் உள்ள அரசு நிலத்தை மீண்டும் டான்சியிடம் அவர் வழங்க வேண்டும் என உச்நீதிமன்றம் வலியுறுத்தியதே ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு பதில் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தன் மீதான அனைத்து ஊழல் வழக்குகளும், தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஜோடிக்கப்பட்டவை என்றும், வழக்குகளைக் கண்டு தாம் ஒருபோதும் அஞ்சியதில்லை என்றும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா தி.மு.க அரசின் மீது குற்றம்சா‌ற்ற‌ியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில், டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை குறிப்பிட்டுள்ள அவர், அனைத்தும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றால் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது போல் டான்சி நிலத்தை அவர் ஏன் மீண்டும் ஒப்படைத்தார் என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலஉச்ச வரம்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரும் முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதற்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஐயப்பாடுகளை எழுப்பியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, நில உச்சவரம்பு சட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாக நிறைவேற்றி சாதனை படைத்தது தி.மு.க அரசு தான் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கடந்த 1970இல் உச்சவரம்பு 15 ஏக்கர் என்று திடீரென்று அறிவித்து சட்டம் இயற்றப்பட்டதும் தி.மு.க ஆட்சியில் தான். இதையடுத்து நில உச்சவரம்பு சட்டத்திற்கு எதிராக நிலம் வைத்திருந்தவர்களிடம் இருந்து மொத்தம் 1,78,880 ஏக்கர் நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டு, தகுதியுள்ள நிலமற்ற ஒரு லட்சத்து 37,236 ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு விதிவிலக்கு வழங்க கோரி ராமதாஸ், அரசுக்கு விண்ணப்பித்திருப்பதை மறந்து விட்டு, தற்போது அறிக்கை விட்டிருப்பது யாரை ஏமாற்றுவதற்கு என்று புரியவில்லை என் முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்