இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ''அரிசிக் கடத்தல் தமிழகம் முழுவதும் அமோகமாக நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் மூலம் 40 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கௌரவத் தலைவராக கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசன் இருந்து வருகிறார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த தண்டபாணி மற்றும் செந்திலரசன் ஆகியோர் அரவக்குறிச்சி நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைகளே இல்லாமல் 1,319 போலி குடும்ப அட்டை குறியீட்டு எண்ணை தயார் செய்து, 3,79,719 கிலோ அரிசியையும், 30,943 கிலோ சர்க்கரையையும், 1,15,865 லிட்டர் மண் எண்ணெய்யையும் பெற்று, அதை அயல்சந்தையில் விற்று, 52,79,709 ரூபாய் அளவிற்கு பணம் சம்பாதித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்த முறைகேட்டை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் துணைப் பதிவாளர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தண்டபாணி, செந்திலரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்றவர்கள் வெளியில் வர தி.மு.க. அரசு ஆதரவு கொடுக்குமேயானால் இது அரிசிக் கடத்தலை மேலும் ஊக்குவிக்க வழி வகுக்கும்.
முதலமைச்சர் கருணாநிதி, நியாய விலைக் கடைகளில் முறைகேடுகள் செய்து பல லட்சக்கணக்கான ரூபாய்களை சுருட்டிய கரூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தண்டபாணி, செந்திலரசு மற்றும் அதற்கு உறுதுணையாய் இருந்த கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசன், மாவட்டப் பதிவாளரை மாற்றம் செய்த தமிழக அரசின் அமைச்சர் ஆகியோர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 1 கோடியே 5 லட்சத்து 59 ஆயிரத்து 418 ரூபாயை மேற்படி நபர்களிடமிருந்து வசூல் செய்ய முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.