வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (12:47 IST)
''தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 4ஆம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளில் மிகப் பெரிய முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன.
ஏழைத்தொழிலாளர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை தி.மு.க ஆட்சியாளர்கள் வழங்க மறுத்ததை அடுத்து சாலை மறியல், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை அப்பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளில் முறைகேடுகள் தொடர்ந்து தி.மு.க ஆட்சியாளர்களால் நடத்தப் படுகின்றன.
இதன் மூலம் ஏழை தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 4ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.