ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான அனுமதி எல்லாம் பெறப்பட்டுவிட்டது. இதில் கர்நாடகம் தலையிட எந்த அதிகாரமும். உரிமையும் இல்லை'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அ.இ.அ.தி.மு.க யாருடன் தேர்தல் கூட்டணி வைக்கும்? என்ற கேள்வி ஜெயலலிதா பதில் அளிக்கையில், போகப் போக தெரியும் என்றார்.
அமர்நாத் பிரச்னையில் அதிமுக நிலை என்ன? என்று கேட்டதற்கு, மத்திய- மாநில அரசுகள் இப்பிரச்னையை சரியாக கையாளவில்லை. புனித தலங்களுக்கு வரும் மக்களுக்கு வசதி செய்து தர வேண்டியது மாநில அரசின் கடமை என்று பதில் அளித்தார் ஜெயலலிதா.
தி.மு.க கூட்டணியை விட்டு கம்யூனிஸ்டுகள் வெளியேறிவிட்டால் தி.மு.க ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயலலதா, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்றார்.
தி.மு.க.வை ராமதாஸ் அதிகமாக திட்டுவதால் அவர், அ.இ.அ.தி.மு.க பக்கம் நெருங்கி வருகிறாரா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாங்கள் கூட கருணாநிதியை அதிகமாக திட்டுகிறோம் என்று ஜெயலலிதா பதில் அளித்தார்.
கம்யூனிஸ்டுகள், பா.ம.க. போன்ற கட்சிகள் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஏன் முடியாது. நேரம் வரும்போது நட்புக் கட்சிகள், மற்ற ஒத்த கருத்துள்ள கட்சிகள் கூட்டணி குறித்து பேசவந்தால் பேசத் தயார் என்று ஜெயலலிதா பதில் அளித்தார்.
தமிழக அமைச்சர்கள் மீது மிரட்டல் புகார் கூறப்பட்டுள்ளதே? என்று கேட்டதற்கு, மக்களுக்கே உண்மை தெரியும். தி.மு.க ஆட்சியில் இலைமறைகாயாக இருந்து வந்த ஊழல், அராஜகம் ஆகியவை இப்போது வெளிப்படையாக தலைவிரித்தாடுகிறது. கொஞ்சமும் கூச்சமின்றி சட்ட விரோத செயலை செய்கிறார்கள். இதுதான் அவர்களுக்கு கடைசி தேர்தல். இனி மக்களை சந்திக்க போவதில்லை என்று இவ்வாறு செய்கின்றனர் என பதில் அளித்தார் ஜெயலலிதா.
ஒகேனக்கல் தங்களுக்கு சொந்தம் என்று கர்நாடக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளாரே? என்று கேட்டபோது, ஒகேனக்கல் விவகாரத்தில் மீண்டும் சர்வே நடத்த வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் கூறியுள்ள கருத்தை ஏற்கவே முடியாது. ஒகேனக்கல் தமிழ்நாட்டின் ஒரு பகுதி என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான அனுமதி எல்லாம் பெறப்பட்டுவிட்டது. கர்நாடகம் இதில் தலையிட எந்த அதிகாரமும் உரிமையும் இல்லை. தமிழக அரசு உறுதியாக, தைரியமாக இந்த திட்டத்தை நிறைவேற்றலாம், நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார் ஜெயலலிதா.
அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்ததன் மூலம் இடதுசாரிகளின் கருத்தோடு இணைந்து இருக்கிறீர்களே? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயலலிதா, தேசிய அளவில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தேச நலனுக்கு உகந்த முடிவைத் தான் அ.இ.அ.தி.மு.க.வும், நானும் எடுத்திருக்கிறேன். இதில் வேறு எந்த காரணமும் இல்லை. இது தற்செயலாக நிகழ்ந்த ஒரு ஒற்றுமை என்றார்.
ராம் சேது திட்டத்தில் உங்கள் கருத்து பா.ஜ. கட்சியோடு ஒத்துப்போகிறது. பொடாவை ஆதரிப்பதில் உங்கள் கருத்து கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக உள்ளது, இந்த நிலையில் கம்யூனிஸ்டுகள் எப்படி உங்களுடன் கூட்டு சேர முடியும்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, தேச நலனை கொண்டு தான் முடிவு எடுப்பேன் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியுடனே கூட்டணி சேர்ந்த கம்யூஸ்டுகளால் எங்களுடன் ஏன் இணைந்து செயல்பட முடியாது என்று கூறினார்.