மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் தாமதம் இல்லை: தமிழக அரசு விளக்கம்!
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:11 IST)
மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவதில் கால தாமதம் என்று சொல்வதில் எவ்வித அடிப்படை உண்மையும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ஆண்டு முதல்கட்டமாக கலந்தாய்வு ஜூலை மாதம் 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடத்தப்பட்டு மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் நடைபெற்ற பொறியியல் கல்வி கலந்தாய்வில் பொறியியல் கல்லூரிகளில் சேர விருப்பப்பட்டு மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகளிலிருந்து தன்னிச்சையாக வெளியேறினால் காலியிடங்கள் உருவாகும்.
அவ்வாறு உருவாகும் காலியிடங்களுக்கும், புதியதாக அனுமதி பெறப்பட்ட அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, சுயநிதி மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கும் சேர்த்து இரண்டாவது கட்ட கலந்தாய்வு 11ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இரண்டாவது கட்ட கலந்தாய்வை நடத்திக் கொள்ள அகில இந்திய மருத்துவக் கழகம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், மாணவர்களின் நலன் கருதி, உரிய காலத்தில் பாடங்கள் தொடங்கவும், மாணவர்கள் புதிய சூழ்நிலைக்கு தயாராகவும் இரண்டாவது கட்ட கலந்தாய்வு தமிழகத்தில் சற்று முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது.
இதில் எந்தவித கால தாமதமும் கிடையாது. மேலும், அகில இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டிலிருந்து தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேராத மாணவர்கள் பற்றிய விபரம் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியில்தான் முடிவாகும். இதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து நேர்காணல் வைத்தால்தான் அரசு இடங்கள் நிறைவடையும். அதன் பின்னர் தனியார் கல்லூரிகளுக்கு நேர்காணல் நடைபெறும்.
2006-2007ஆம் ஆண்டில் முதல் கட்ட கலந்தாய்வு 10.7.2006 முதல் 17.7.2006 வரை நடைபெற்றது. இரண்டாவது கட்ட கலந்தாய்வு 10.8.2006 முதல் 1.9.2006 வரை நடைபெற்றது. 2007-2008ஆம் ஆண்டில் முதல் கட்ட கலந்தாய்வு 9.7.2007 முதல் 15.7.2007 வரை நடைபெற்றது. இரண்டாவது கட்ட கலந்தாய்வு 27.8.2007 முதல் 1.9.20007 வரை நடைபெற்றது.
கடந்த காலத்திலும் இதே கால அட்டவணைப்படிதான் மருத்துவப் படிப்புக்கு கலந்தாய்வுகள் நடைபெற்றன. எனவே, மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவதில் கால தாமதம் என்று சொல்வதில் எவ்வித அடிப்படை உண்மையும் கிடையாது" என்று கூறப்பட்டுள்ளது.