''ஏழை எளியவர்களுக்கு வேண்டியவனாக தெரியும் நான் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் வேடதாரியாக தெரிகிறேனா?'' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் நான் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு, மக்களை திசை திருப்பும் வகையில் முதல்வர் பதில் அளித்துள்ளார். காவிரி பிரச்னையில் 1974ல், பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கை கருணாநிதி திரும்பப் பெற்றுள்ளார்.
அப்படி திரும்ப பெறாமல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டிருந்தால் 1974ம் ஆண்டிலேயே தீர்ப்பு கிடைத்திருக்கும். 34 ஆண்டுகளில் கர்நாடகம் பாசனப் பகுதியை அதிகரித்துவிட்டு இன்றைக்கு தீராத தலைவலியாகி இருந்திருக்காது என்று கூறியுள்ளார்.
1974ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்க கச்சத்தீவை சிறிலங்காவுக்கு வழங்க கருணாநிதி உடன்பட்டார். இதனால் இன்று வரை கடலோர மீனவர்கள் உயிருக்கு போராடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், 1998ம் ஆண்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற அனுமதி பெற்றிருந்தும்கூட, இன்று வரை நிறைவேற்றாதது மட்டுமல்ல, சோனியா காந்தி கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழக மக்களின் போராட்டத்தையும் ஒத்திவைத்தார். இதனால் இந்த திட்டம் கேள்விக்குறியாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு அளித்த சலுகைகளை பட்டியல் போடுகிறார். ஆனால், அவருடைய ஆட்சிக் காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயிகளின் பட்டியல் எங்கே? உண்மையில் விவசாயிகள் பயன் அடைந்திருந்தால் என் ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் கூடியிருக்க மாட்டார்களே? என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
வருமான வரிக்கு பயந்து காங்கிரஸ்காரர்கள் வீட்டு வாசலில் நான் காத்திருப்பதாக கேலி பேசியுள்ளார். என் சொத்துக்கள் நான் உழைத்து சேர்த்தவை. ஆகவே, நான் யார் வீட்டு வாசலிலும் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கருணாநிதி நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் முண்டாசு கட்டிக் கொண்டார். தஞ்சையில் விவசாயிகள் விருப்பப்படி நான் முண்டாசு கட்டிக் கொண்டேன். அதை, 'வேடமிட்டு விவசாயிகளை ஏமாற்றுகிறேன்' என்கிறார். ஏழை, எளிய மக்களுக்கு வேண்டியவனாக தெரிகிற நான் கருணாநிதிக்கு மட்டும் வேடாதாரியாக தெரிகிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.