இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த ஒரு மாத காலத்திற்குள் வடபழனி, மாம்பலம், போரூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் 8 பேர் மர்மமான முறையில் அடித்தும், எரித்தும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் எட்டு கொலைகள் அரங்கேற்றப்பட்டும், இதுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியாதது மட்டுமல்லாமல், குற்றவாளி யார் என அடையாளம் காணவும் முடியாது, தொடர் கொலைகளை தடுக்கவும் இயலாது காவல்துறை தடுமாறுவது கண்டு சென்னைவாழ் மக்கள் பீதியும் அச்சமும் அடைந்துள்ளனர்.
தொடர் கொலை சம்பவங்களும், கடும் குற்றங்களும் பெருகி வருவது தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைகிறது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் உறவினர் ஒருவரது கொலையிலும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
'கொலை நகரமாக மாறி வருகிறது தலைநகரம்' என்ற அச்சத்தை போக்கும் வண்ணம் குற்றக் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு இத்தொடர் கொலை நிகழ்வுகளுக்கு காரணமான குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும். ரோந்து மற்றும் உளவுப்பிரிவை வேகப்படுத்தி மக்களிடையே அச்சத்தைப் போக்க வேண்டும்" என்று சரத்குமார் கூறியுள்ளார்.