வடமாநிலங்களில் தொடர்மழை: ஈரோட்டில் ரூ.100 கோடி ஜவுளிகள் தேக்கம்!
செவ்வாய், 24 ஜூன் 2008 (12:42 IST)
வடமாநிலங்களில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் ஈரோட்டில் இருந்து வடமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.100 கோடி ஜவுளிகள் தேங்கி கிடக்கிறது.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் ஜவுளி உற்பத்தியில் முன்னணி வகித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஜவுளிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் ஈரோடு ஜவுளி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்போக்குவரத்து வடமாநிலங்களுக்கு நிறுத்தப்பட்டதால் ஈரோட்டில் சுமார் ரூ.100 கோடி ஜவுளிகள் தேங்கி கிடக்கிறது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.