மது விடயத்தில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை: ராமதாஸ்!
புதன், 28 மே 2008 (17:16 IST)
"மதுவிலக்கு விடயத்தில் மட்டும் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை''என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்கள் இளம் வயதிலேயே மது அருந்தத் தொடங்கி விடுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு 28 வயதில் முதன்முதலாக மது அருந்தத் தொடங்கிய இளைஞர் சமுதாயம் இன்றைக்கு 19 வயதிலேயே மது அருந்தத் தொடங்கி விடுகிறார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய இளைஞர்களிடையே 15 வயதிலேயே மதுப்பழக்கம் தொற்றிவிடும்.
கோடி கோடியாய் வருமானம் வரும் மதுக்கடைகளைத் திறந்துவிடுங்கள் என்று சொன்னபோது, மக்களின் நிம்மதி, கோடான கோடி பெறும் என்று கருதி, மதுக்கடைகளைத் திறக்க மாட்டேன் என்று உறுதிபடச் சொன்னவர் அண்ணா. அவர் மறைந்தாலும், மதுக்கடைகளை இங்கே திறந்தபோது மது ஒழிப்பை உள்ளடக்கிப் பெரும் போராட்டத்தை அறிவித்தவர் காமராஜர். இந்தத் தலைவர்கள் சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு மதுக்கடைகளைத் திறப்பதைத் தவிர இனி வேறு வழியில்லை என்று எம்.ஜி.ஆர். சொன்னார் என்று சொல்லி மதுக்கடைகளைத் திறந்துவிட்டதற்கு நியாயம் கற்பிக்க முயற்சிப்பது வியப்போ வியப்பு.
மதுவிலக்குப் பற்றிப் பேசுவது இன்றைக்குச் சில விதிவிலக்கான வேதாந்திகள் மட்டுமே என்ற அளவுக்கு ஏளனம் செய்யப்படுகிறார்கள். `திடீர் மகாத்மாக்கள்' என்றும், மகாத்மா காந்தியின் பேரனால் கூட மதுவிலக்குக் கொள்கையில் இவ்வளவு பிடிவாதமாக இருக்க முடியாது என்ற பாராட்டைப் பெறும் அளவுக்கு அரசியல் அரங்கில் சிலர் உரத்த குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் முதலமைச்சரே ஏளனம் செய்திருக்கிறார்.
மதுவுக்கு அடிமையானவர்களும் அதற்கு ஆதரவானவர்களும் ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம்மாறி, இன்றைக்கு மது எதிர்ப்பும் மது ஒழிப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போரும் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். காலம் மாறிப்போச்சு என்று சொல்வதைத் தவிர, வேறு என்ன சொல்ல முடியும்?.
தமிழகத்தில் மதுவிலக்கு செயல்பாட்டில் இருந்தபோது, கள்ளச்சாராயச் சாவுகள் என்பது பெரும்பாலும் இல்லை. இங்கே மதுக்கடைகள் திறக்கப்பட்ட பிறகுதான் சாராயச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கமே குடியை அனுமதிக்கிறபோது, எல்லாவகைக் குடியும் வந்துவிடுகின்றன. எல்லாவகைக் குடிகளும் வருவதால், சாராயச் சாவுகள் மலிந்துவிடுகின்றன.
மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு வருமானம் குறையும். ஆனால், மக்களின் கையில் வருமானம் மிஞ்சும். அவர்கள் கையில் மிஞ்சும் வருமானம் துணி மணியாய், நிலபுலனாய் மாறும். அதனால், மக்களுக்கும் அவர்கள் மூலம் அரசுக்கும் வளம் சேரும். எனவேதான் மதுக்கடைகளை ஒழித்து மக்களை வளம்பெறச் செய்யுங்கள் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். ஆனால், இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.