ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன் என தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறினார்.
கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெற்றது குறித்து தமிழக மாநில தலைவர் இல.கணேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வடநாட்டு கட்சி என்று வர்ணிக்கப்பட்ட பா.ஜ.க.வுக்கு தென்நாட்டிலும் வெற்றி கிடைத்துள்ளது. எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார்.
கர்நாடகத்தில் தற்போதைய தேர்தல் முடிவு அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். பா.ஜ.க.வின் வெற்றி, மத்தியில் ஆட்சி புரிகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 4 ஆண்டுகால செயல்பாடுகளுக்கு எதிராக அமைந்துள்ளது.
கர்நாடக முன்னள் முதல்வர் எடியூரப்பா அப்பழுக்கற்ற தேசியவாதி. இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு என்ற கொள்கை உடையவர். இதனால் ஒகேனக்கல் பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தமிழக எல்லைக்குள் நடக்கும் திட்டம். அதை நிறைவேற்ற எடியூரப்பா தடையாக இருக்க மாட்டார்.
முதலமைச்சர் கருணாநிதி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக தேர்தல் முடியும் வரை ஒத்திவைப்பதாக கூறியிருந்தார். இது குறித்து தமிழக அரசுதான் கர்நாடக அரசிடம் பேச வேண்டும் என்று இல.கணேசன் கூறினார்.