செங்கல்பட்டில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் அதிநவீன தடுப்பூசி மற்றும் மருத்துவ பூங்கா தொடங்கப்பட விருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், செங்கல்பட்டு அருகே மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு 400 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 200 ஏக்கரில் உலகத்தரத்துக்கு இணையாக நவீன வசதிகள் கொண்ட தடுப்பூசி உற்பத்தி மையம் மற்றும் மருத்துவ பூங்கா 500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது.
மேலும் இந்த மூன்று மையங்களும் தரம் உயர்த்தப்பட்டு அங்கும் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும். வளரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும். மீதி உள்ள 100 ஏக்கரில் மருத்துவ சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் இது செயல்பாட்டுக்கு வரும்.
திருவள்ளூரில் தடுப்பூசி போடப்பட்ட நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் பயன் படுத்தப்பட்ட தட்டம்மை தடுப்பூசி நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் உள்ளது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. முழு விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சியில் ஊசி குழல் துரு பிடித்ததாக வந்த புகாரை தொடர்ந்து இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள் அங்கு சென்று மாதிரிகளை பெற்று வந்துள்ளனர். இதேபோல் பல இடங்களிலிருந்தும் இந்த ஊசியின் மாதிரிகள் பெறப்பட்டு அவை ஆய்வுக்காக கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆய்வறிக்கைகள் வந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்புமணி கூறினார்.