''மேட்டூர் அணையை ஜூன் முதல் வாரத்திலேயே தமிழக அரசு திறந்துவிட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும்'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2003-04ஆம் ஆண்டுகளில் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நம் நாடு 2006ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, பருவம் தவறி பெய்த மழையால் விவசாய விளை பொருட்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அணைகளில் நீர் இருப்பு கணிசமாக உள்ளது. வானிலை ஆராய்ச்சியாளர்களும் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
மேட்டூர் அணையில் எப்போதும் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் நீர் மட்டம் 98 அடியாக உள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தமிழக அரசு மேட்டூர் அணையை ஜூன் முதல் வாரத்திலேயே திறந்துவிட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே குறுவை அறுவடை முடிந்துவிடும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும் விலையும் கிடைக்கும். தமிழக அரசும் முழுவீச்சில் குறுவை நெல்லை கொள்முதல் செய்தால் கணிசமாக நெல்லை கையிருப்பு வைக்க முடியும். உற்பத்தி அதிகமானால் இதர மாநிலங்களுக்கு நெல்லை விற்பனை செய்யலாம்.
விவசாயிகளுக்கு நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கும். வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யாமலும், தேவைப்பட்டால் அயல்நாட்டிற்கு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அரிசி ஏற்றுமதியை விலக்கிக் கொண்டு ஏற்றுமதியும் செய்யலாம். தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு நல்ல முடிவை எடுத்து நஷ்டத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறேன் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.