ஐ.ஏ.எஸ். தேர்வு: தமிழகத்தை சேர்ந்த 79 பேர் வெற்றி!

சனி, 17 மே 2008 (11:01 IST)
தமிழகத்தைச் சேர்ந்த 79 பேர் ஐ.ஏ.எ‌ஸ் தே‌ர்‌‌வி‌ல் வெற்றி பெற்றுள்ளனர். இ‌தி‌ல் சென்னை மாணவர் வினோத் சேஷன் அகில இந்திய அளவில் 3வது இட‌த்தை பிடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய அளவிலான அதிகாரிகளாக பணிபுரியக் கூடிய வேலைக்கு மத்திய அரசு தேர்வாணயம் ஆண்டு தோறும் முதல்நிலை மற்றும் மெயின் தேர்வுகளை நடத்தி வருகிறது.

முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மெயின் தேர்வு எழுத வேண்டும். மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெற்று அதிக மார்க் எடுப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்கள்.

2007ஆம் ஆண்டு மே மாதம் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இந்தியா முழுவதும் விண்ணப்பித்த 3 லட்சத்து 27 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 469 பேர் இந்தத் தேர்வை எழுதினார்கள். மெயின் தேர்வுக்கு 9 ஆயிரத்து 266 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 670 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

மெயின் தேர்வில் இருந்து 1,886 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் 210 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நேர்முகத் தேர்வு டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. அலுவலகத்தில் மார்ச் 31ஆ‌ம் தேதி முதல் மே 3ஆ‌ம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இறுதித் தேர்வு முடிவுகள் நேற்‌றிரவு வெளியிடப்பட்டன.

இந்தத் தேர்வில் 734 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 580 பேர் ஆண்கள். 154 பேர் பெண்கள். அகில இந்திய அளவில் அடப்பா கார்த்திக் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்து உள்ளார். பெண்களில் முதலிடம் பிடித்தவர் அஷீமா ஜெயின்.

தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதியவர்களில் 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அகில இந்திய அளவில் 3-வது இடத்தை சென்னை மாணவர் வினோத் சேஷன் பிடித்துள்ளார். இவர் சென்னை சூளைமேடு, சிவகாமித் தெருவில் பெற்றோருடன் வசிக்கிறார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தண்டலம் ஆகு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்