முதலமைச்சர் கருணாநிதி சட்டப் பேரவை விதி எண். 110இன் கீழ் இன்று பேரவையில் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:
மஞ்சள்காமாலை நோய்க்கான தடுப்பூசி போடு இறந்து போன திண்டுக்கல் பெரியார் காலனியை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசனின் 11 மாத குழந்தையின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
பரமத்தி வேலூரில் ஏப்ரல் 27ஆம் தேதி நடந்த தீ விபத்தால் ஏற்பட்ட இழப்பிற்கு செந்தில்குமாருக்கு ரூ.25 ஆயிரமும், சீனிவாசனுக்கு ரூ.30 ஆயிரமும், சேகருக்கு ரூ.15 ஆயிரமும், ஆறுமுகத்திற்கு ரூ.20 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.90 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும்.
தாராபுரம், காங்கேயம் ஆகிய இடங்களில் சாலை விபத்தில் பலியான மாசாத்தாள், உமாதேவி, பழனியம்மாள், பாக்யலட்சுமி ஆகியோரது குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும்.
குளிக்க சென்ற போது கால்வாய் புதைகுழியில் சிக்கி பலியான திருவள்ளூர் மாவட்டம், பூச்சி அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா, விஷ்ணு ஆகியோரின் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்பேரமநல்லூர் காலனியில் குளத்தில் மூழ்கி இறந்த நித்யா, நந்தினி ஆகிய மாணவிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும்.
சிறிலங்காவில் வேலை பார்த்த போது இறந்த கடலூரை சேர்ந்த அன்பரசன் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும்.
தண்ணீர் என நினைத்து அமிலத்தை குடித்து இறந்த தர்மபுரி மாவட்டம் செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 4 வயது குழந்தை சன்மதி குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டம், தும்பிச்சிபாளையம் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து பலியான சிவலட்சுமி, காளீஸ்வரன், செல்வகுமார் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.50 நிதி உதவி வழங்கப்படுகிறது. விபத்தில் பலியான சின்னகாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுகன்யா, முருகம்மாள், மல்லிகா, வீரமாத்தி ஆகியோரின் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும்.
சாலை விபத்தில் உயிரிழந்த காஞ்சிபுரம் மாவட்டம் நசரத்பேட்டை ஊராட்சியை சேர்ந்த ஷோபனா குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும்.
கோவை, அவினாசி சாலையில் இயங்கிவரும் கூர்நோக்கு இல்லத்தில் இறந்துபோன சிறுவன் முபாரக் அலி குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
காவேரிப்பட்டணம் தொகுதிக்குட்பட்ட திம்மாபுரத்தில் தென்னை மரம் விழுந்து பலியான 7 வயது சிறுவன் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும், மின்சாரம் பாய்ந்து பலியான வேலூர் மாவட்டம், சாணாங்குப்பத்தை சேர்ந்த அம்மு, ஜானகி ஆகியோர் குடும்பத்துக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
தளி தொகுதிக்குட்பட்ட மஞ்சுகாப்பு காட்டில் காட்டு யானை மிதித்து இறந்து போன துரைசாமி குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
யானை மிதித்து பலியான கோவை மாவட்டம் பெரியதடாகமத்தில் உள்ள அனுவாவி சுப்ரமணியசுவாமி கோவில் காவலாளி சுப்பிரமணியம் குடும்பத்துக்கு வனத்துறையின் சார்பாக ஒரு லட்ச ரூபாயும், இந்துசமய அறநிலையத்துறையின் சார்பாக ஒரு இலட்ச ரூபாயும், ஆக மொத்தம் இரண்டு லட்ச ரூபாய் ஏற்கனவே நிதிஉதவியாக வழங்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி தொகுதியில் இடி தாக்கி இறந்த ராணி குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், திருவட்டாறு தொகுதியில் இடி தாக்கி இறந்த இரண்டு பேர் குடும்பத்துக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும்.
செங்கற்பட்டு தொகுதியில் ஏரியில் மூழ்கி இறந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், விழுப்புரம் மாவட்டம், சாரம் கிராமத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த திண்டிவனம் வட்டாட்சியர் ஆர்.சுப்பிரமணியம், திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலக உதவியாளர்கள் எஸ். பன்னிர்செல்வம், டி.ஏழுமலை ஆகியோரின் குடும்பங்களுக்கும், காயமடைந்த திண்டிவனம் கோட்டாட்சியர் எஸ்.கேப்ரியல், ஓட்டுநர் குணசேகரன் ஆகியோருக்கும் 12 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும்.
தட்டம்மை தடுப்பூசி ஒவ்வாமையால் உயிரிழந்த குழந்தைகள் நந்தினி, பூஜா, மோகனப்பிரியா, லோகேஷ் ஆகிய நான்கு குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், விழுப்புரம் மாவட்டம், காட்டுக் கோட்டையில் ஆற்றில் மூழ்கி பலியான தமிழரசன், செந்தமிழ் செல்வன், தேன்மலர், ஜீவிதா, சரிதா, கவிதா ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படும்.
ஆக மொத்தம் ரூ.55 லட்சத்து 30 ஆயிரம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்பட்டுள்ளது.