''வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாய பாடமாக்க அரசு முடிவு செய்துள்ளது'' என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள், அரசு, தனியார் பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாய பாடமாக்கி, ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா' என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை அரசு முழுமையாக உணர்ந்துள்ளது. 84 வயதிலும் தினந்தோறும் முதலமைச்சர் கருணாநிதி யோகா பயிற்சி மேற்கொள்வதால்தான் 24 வயது இளைஞரை போல உழைத்து வருகிறார்.
கடந்த ஆண்டு முதலே உடற்பயிற்சி கல்விக்கான 2 பாட வேளைகளில் ஒரு பாட வேளை யோகா பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இது விரிவுபடுத்தப்படும். கடந்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
உடற்கல்விக்கான முக்கியத்துவத்தை தொடர்ந்து பள்ளிகளில் இதனை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 600 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை உங்களுக்கு யோகம் இருந்தால் யோகா கிடைக்கும்.
பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு பரிசீலிக்கும். வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாய பாடமாக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.